×

தினமும் 200 டோக்கன் வழங்கி குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம்: இன்று முதல் வழங்க ஏற்பாடு

சென்னை: ஜூன் மாத பொது விநியோகத் திட்டம், பாதுகாப்புடன் சுழற்சி  முறையில் மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு   டோக்கன் வழங்கி பொருட்கள் விநியோகம் செய்யப்படும். அதற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக  அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம், ஏற்கனவே முந்தைய மாதங்களில் கடைபிடித்தது போலவே ஜூன்  மாத பொது விநியோகத் திட்ட செயல்பாட்டினையும் பாதுகாப்புடன் சுழற்சி முறையில் மேற்கொள்ள நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகா வண்ணம் டோக்கன்கள் வழங்கி விநியோகத்தை பாதுகாப்புடன் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 4ம் தேதி முடிய 4 தினங்களுக்கு நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்தம் பொருட்கள் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரம் குறிக்கப்பட்டுள்ள டோக்கன்களை விநியோகம் செய்வார்கள்.

அந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்ட நாள், நேரத்தில் அட்டைதாரர்கள் அவர்தம் நியாய விலைக் கடைகளுக்கு சென்று அவருக்குண்டான கொரோனா நிவாரண கூடுதல் அரிசி உள்ளிட்ட இன்றியமையா பண்டங்களை (துவரம் பருப்பு) பெற்றுச் செல்ல வேண்டும். டோக்கன்கள் அடிப்படையில் ஜூன்  மாதத்திற்கான விநியோகம் வரும் 5ம் தேதி சனிக்கிழமை முதல் நியாய விலைக் கடைகளில் மேற்கொள்ளப்படும். நிர்வாக காரணங்களினால் துவரம் பருப்பு மட்டும் வரும் 7ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும். அட்டைதாரர்கள் உரிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றியும் தங்களையும் சமூகத்தையும் நோய்தொற்று அபாயத்திலிருந்து காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Distribution of goods to family cards by issuing 200 tokens daily: Arrange to issue from today
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...